ஈரோடு, மே 26: யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க தோண்டப்படும் அகழிகளின் ஆழத்தை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ரகு கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தின் வனப்பகுதிகளான தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் விவசாய நிலங்களில் அடிக்கடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதால் விவசாய பயிர்கள் சேதமடைவதுடன் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அவ்வாப்போது ஏற்பட்டு வருகின்றன.
எனவே, விவசாய நிலங்களில் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் அகழிகள் வெட்டி, யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஒரு சில இடங்களில் அகழிகள் வெட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றின் ஆழம் சுமார் 6 அல்லது 7 அடிகள் மட்டுமே உள்ளன.
இதனால், யானைகள் எளிதில் அகழிகளை கடந்து விவசாய நிலங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. எனவே, அகழிகளின் ஆழத்தை 25 அடியாக அதிகரித்து வெட்ட வேண்டும். தவிர, அகழி தோண்டப்படும் போது வரும் மண்ணை வனத்துறையின் பகுதியில் கொட்டாமல் அவற்றை அகழிக்கு மறுபுறம் உள்ள விவசாய நிலங்களில் கொட்ட வேண்டும்.
அப்போது தான் யானைகள் மீண்டும் மண்ணை அகழிக்குள் தள்ளி, அந்த இடத்தை மேடாக்கி விவசாய நிலங்களுக்குள் நுழைவதை முழுமையாக தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.