குடியாத்தம், ஆக.22: குடியாத்தம் அருகே மோர்தானா அணை சேற்றில் சிக்கிய யானை பரிதாபமாக பலியானது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழகத்தின் 2வது பெரிய வனச்சரகமாக உள்ளது. தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, மலைப்பாம்பு உட்பட பல்வேறு உயிரினங்கள் அதிக அளவில் வாழ்கின்றன.
இங்குள்ள வனவிலங்குகள் அவ்வப்போது மாநில எல்லையில் அமைந்துள்ள மோர்தானா அணைக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக, கிருஷ்ணகிரி வனப்பகுதி, ஆந்திர மாநிலம், சித்தூர் வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குடியாத்தம் வனப்பகுதிக்குள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை மோர்தானா அணை பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் ஒன்றரை வயதுடைய ஆண் யானை சேற்றில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து, குடியாத்தம் கால்நடை மருத்துவர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், யானையின் உடல் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘அணையில் தண்ணீர் குடிக்க வந்தபோது, சேற்றில் சிக்கி யானை இறந்து இருக்கலாம். அல்லது யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இந்த யானை சேற்றில் சிக்கி இருக்கலாம். ஆனால், இறந்து கிடந்த யானை உடம்பில் எந்த காயமும் இல்லை. எனவே, யானை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சேற்றில் சிக்கி யானை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.