ஊட்டி, செப். 4: ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து திருத்த விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊட்டி காக்காதோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காவல் துறையினர், அரசு வழக்கறிஞர்களுக்கான மோட்டார் வாகன விபத்து திருத்த விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மோட்டார் வாகன விபத்து விதிகளின்படி, விபத்து நடந்து 48 மணி நேரத்தில் முதல் விபத்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் விபத்து நடந்து 90 நாட்களுக்குள் காயம் அடைந்தவருக்கு தகுந்த இழப்பீடு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையும், காவல்துறையும் இணைந்து இவ்விதிகளை பின்பற்றினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும், என்றார். விரைவில் நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் தரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம், மாவட்ட எஸ்பி பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.