கிருஷ்ணகிரி, ஆக.19: கிருஷ்ணகிரியில், வீட்டில் இருந்தபடியே நகராட்சிக்கு வரி செலுத்தும் வகையில், மொபைல் ஆப்பை நகர்மன்ற தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர், தங்கள் வரிகளை நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாலும், மக்களின் நலன் கருதியும் நகராட்சிக்கு இணையம் மற்றும் மொபைல் ஆப் வழியாக வரி கட்டும் திட்டத்தை, நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் அறிமுகம் செய்து வைத்தார். அந்த திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி மற்றும் கட்டணம், தொழில் வரி, குப்பை விரி உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாக ஆணையகரகத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக செலுத்தலாம். பிறப்பு- இறப்பு சான்றிதழ், டிரேடு லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும், இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே பெறலாம்.
இணையதளத்தின் மூலம், கிருஷ்ணகிரி நகராட்சிக்குள் வசிக்கும் நபர்கள் தங்களை பதிவு செய்தால், அதில் வரும் ‘க்யூ ஆர் கோட்’ மூலம் வரி பாக்கிகளை செலுத்தியும், சலுகைகளையும் பெறலாம். பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் தேவைப்படும் கோரிக்கைகளையும் இதில் தெரிவிக்கலாம். மேலும்,‘மொபைல் ஆப்’ மூலம் வரி கட்டும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால், வரி பாக்கிகளை வங்கி டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ முறையில் ஆன்லைனில் கட்டலாம். எனவே, வரி பாக்கிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே செலுத்தி பயனடையலாம். மேலும், நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணையாதவர்கள், பணம் கட்டாதவர்களை இணைக்கும் வகையில், 10 பேர் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று, பாதாள சாக்கடை திட்ட இணைப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, நகராட்சி ஆணையர் வசந்தி, உதவித் திட்ட அலுவலர் காயத்ரி, செயற்பொறியாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், இளநிலை பொறியாளர் அறிவழகன், இளநிலை உதவியாளர்கள் சரவணன், பாலச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.