திண்டிவனம், செப். 11: திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில் மகள், பேத்தி படுகாயம் அடைந்தனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த சண்முகஜோதி மனைவி ஸ்ரீ ஆண்டாள் (65). இவரது மகள் பிருந்தா (35), பிருந்தாவின் மகள் அக்ஷயா (13) ஆகிய மூவரும் நேற்று பைக்கில் திருவக்கரை கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள தென் பசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு மூவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஸ்ரீஆண்டாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவரது மகள் மற்றும் பேத்தி ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.