சென்னை, ஜூன் 7:சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் துரத்தியதில் ஏராளமானோர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சென்னையில் ஆண்டுக்கு 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம் தீட்டி அதை செயல்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாகியுள்ளது. சென்னையில் கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு, லாயிட்ஸ் ரோடு ஆகிய இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்து வருவதாக தெரிவித்து உள்ளது. இதுவரை ஆண்டுக்கு 24,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் எண்ணிக்கையை உயர்த்துவற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக் கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், அவற்றை கண்காணிக்கவும் சென்னை மாநகராட்சி ரூ.52 கோடி செலவில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நாய்கள் மீது மைக்ரோசிப் பொருத்தப்படும். மேலும் இதற்கு என தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாய்கள் கண்காணிக்கப்பட்டு பிடிக்கப்படும். மைக்ரோசிப் மூலம், நாய்களின் அடையாளம், உடல் நிலை, தடுப்பூசி விவரங்கள் போன்றவை பதிவு செய்யப்படும். தொடர்ந்து செயலி மூலம், இந்த தகவல்கள் சேமிக்கப்பட்டு எதிர்கால பயன்பாட்டுக்கு வைக்கப்படும்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டமானது. சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளை மேற்பார்வை செய்யும் முயற்சியாகும். மிகவும் நவீனமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இந்த திட்டம் நகரில் உள்ள பிராணிகளை பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும்.
சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கிவிட்டது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது சிப் பொருத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இவை முழு அளவில் முடிவடையும் போது தெருநாய்கள் அனைத்து கண்காணிப்புக்குள் கொண்டு வர முடியும். மேலும் வீட்டு நாய்களுக்கு சிப் பொருத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்கேனர் மூலம் அறியலாம்
மாநகராட்சி கால்நடை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும். அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை உள்ளிட்ட விபரங்கள் அதில் இருக்கும். உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும். இந்த சிப்களில் நாயின் விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும். இதன் மூலம் நாய்களின் தடுப்பூசி விவரங்களைக் கண்காணிக்க முடியும். வருடாந்திர தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டலை உரிமையாளர்களுக்கு அனுப்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.