புதுச்சேரி, நவ. 1: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பாகூர் மாதா கோயில் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. எதிர்பார்க்காத வகையில் காங்கிரசுக்கு வாக்குகளை வாரி கொடுத்தீர்கள். மோடி வேண்டாம் என்று ராகுலுக்கு ஓட்டு போட்டீர்கள். தேர்தல் வருகிறது, நீங்கள் மோடி ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும்.
நாராயணசாமி ஆட்சியில் 3 இடத்தில் இருந்து அரிசி மற்றும் பணம் மக்களுக்கு வந்தது. இப்போது முறையாக பணம் வருகிறதா? என்றால் இல்லை. காஸ் மானியம் இல்லை. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 போடவில்லை. மோடியும் நம்மை ஏமாற்றுகிறார், ரங்கசாமியும் ஏமாற்றுகிறார். இன்னும் 100 நாளில் நல்ல ஒரு வாய்ப்பு வருகிறது. பெண்களுக்கு பேருந்தில் இலவசம், ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை, காஸ் மானியம் ரூ.500 என அனைத்தும் கிடைக்கும். எனவே கை சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும், என்றார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி, முன்கூட்டியே தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.