மதுராந்தகம், ஆக.15: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய சார்பில், ‘அறம் 24’ என்ற தலைப்பில் பட்டமளிப்பு விழா நேற்று காலை அடிகளார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஆதிபராசக்தி கல்வி மருத்துவ பண்பாடு அறநிலையின் துணை தலைவரும், மருத்துவ கல்லூரியின் தாளாளருமான கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு இளநிலை, முதுநிலை மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற 188 மாணவ – மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.
பின்னர், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி மாணவர்களிடையே பேசுகையில், ‘மருத்துவ படிப்பு முடித்து பட்டம் பெரும் நீங்கள் எல்லாம் இந்த கல்லூரியில் ஆடியெடுத்து கல்லாக வந்து இன்று ஒரு சிற்பமாக நிற்கிறீர்கள். வாய்ப்புகள் எல்லாம் சமமாகதான் அனைவருக்கும் கிடைக்கிறது. எனக்கு பொருளாதாரம் இல்லை, நான் கடனிலையில் இருக்கிறேன், முதல்நிலையில் இல்லை என்று இல்லாமல் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் உயரவேண்டும்’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார், பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், மருத்துவ கல்லூரி செயலாளர் மதுமலர் பிரசன்ன வெங்கடேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் அகத்தியன், மருத்துவர் ஷாலினி, மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் ரேகா, மருத்துவ கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி லிங்கநாதன் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.