மதுராந்தகம், நவ.26: மேல்மருவத்தூர் அருகே ரயில்வே கேட்டை மூடியபோது கம்பி உடைந்துவிழுந்தது. இதன்காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றாதால் சுமார் 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் இருந்து சித்தாமூர் செல்லும் நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை மார்க்கமாக ரயில் செல்வதற்காக மூடப்பட்டது. அப்போது, ரயில்வே கேட்டின் கம்பி உடைந்து விழுந்தால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதன்காரணமாக, மதுரை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அருகே அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து, சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு அரை மணி நேரம் காலதாமதமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.மேலும், கேட் உடைந்து விழுந்ததால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். மேல்மருவத்தூர் போலீசார் வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்தை சரி செய்தனர்.