மேலூர், ஜூலை 22: மேலூர் அருகில் உள்ள சிவாலயபுரம் சங்கரலிங்கம் கோயிலில், ஆடி தபசு விழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு அன்னதான நிகழ்வை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள சங்கர நாராயணசுவாமி, கோமதியம்மன் கோயிலில் ஆடி தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. கோமதியம்மன், சங்கரலிங்கம் மற்றும் சங்கர நாராயணர் சுவாமிகளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் கூடிய சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை வணிகவரி துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ராஜேஷ் அர்ச்சகர், கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.