மேலூர், ஆக. 13: மேலூரில் புதிதாக ரூ.7.87 கோடியில் கட்டப்பட்ட தினசரி மார்க்கெட் நேற்று திறக்கப்பட்டது. மேலூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 23வது வார்டில் உள்ள நாளங்காடி தெருவில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 87 லட்சத்தில் புதிய தினசரி மார்க்கெட் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தினசரி மார்க்கெட்டில் மேலூர் நகராட்சி தலைவரும், திமுக நகர் செயலாளருமான முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையாளர் கணேஷ், பொறியாளர் முத்துகுமார், நகராட்சி துணை தலைவர் இளஞ்செழியன் குத்துவிளக்கு ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.