மேலூர், அக். 29: மேலூரில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஆர்வமுடன் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், மேலூர் வட்டாரத்தில் உள்ள வெள்ளலூர், திருவாதவூர், அ.வல்லாளபட்டி, தெற்குதெரு, கீழவளவு ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழழ நடைபெற்றது. மேலூர் சந்தைபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார்.
மேலும் அ.வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். யுனிசெப் ஒருங்கிணைப்பாளர் பூஞ்சரம் கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர்ப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரதிதேவி செய்திருந்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.