முத்துப்பேட்டை, ஜூன் 13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தலைமையாசிரியர் மகாதேவன் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் “குழந்தைகளின் வருமானம், குடும்பத்திற்கு அவமானம்” இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14-வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கார்த்திக், அபிநயா சத்துணவு அமைப்பாளர் சுதா சத்துணவு பணியாளர்கள் வடுவம்மாள், வளர்மதி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.