திருமங்கலம், ஜூன் 27: திருமங்கலம் அருகே மேலஉரப்பனூரில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்து இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கரடிக்கல் விஏஓ பூமாரிக்கு மேலஉரப்பனூர் கிராமத்தில் சிலர் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விஏஓ, தலையாரி அழகர்சாமி மற்றும் திருமங்கலம் டவுன் எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார் மேலஉரப்பனூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன் தினம் அதிகாலை 5 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது முதல் லாரியில் ஒரு யூனிட் கிராவல் மண்ணும், இரண்டாவது லாரியில் இரண்டு யூனிட் கிராவல் மண்ணும் அரசு அனுமதியின்றி அள்ளிவந்தது தெரியவந்தது. தொடர்ந்து மண் ஏற்றி வந்த லாரி டிரைவர்கள் திருமங்கலத்தினை சேர்ந்த கர்ணன்(40), சித்தாலையை சேர்ந்த வல்லத்து(30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, மண் அள்ளி வந்த இரண்டு லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.