கோவை, ஜூன் 30: கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ. தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது. மூன்று பேக்கேஜ் மூலமாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. முதல் பேக்கேஜ் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு நடக்கிறது. இதில் மைல் கல் பகுதியில் ஒரு மேம்பாலமும், மாதம்பட்டியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது. மைல்கல் பகுதியில் சர்வீஸ் ரோடு மற்றும் தரை பாலம் கட்டும் பணிகள் நடந்தது.
சுடுகாட்டின் முன் பகுதியை அகற்றி அந்த இடத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. தற்போது 30 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக மைல்கல் எல்லை போலீஸ் செக்போஸ்ட் அகற்றப்பட்டது. ரோட்டோரத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படவுள்ளது.
பஸ் ஸ்டாப்பும் இங்கே இருந்து அகற்றப்பட்டது. 200 மீட்டர் தூரத்திற்கு ரோட்டின் ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஒரிரு நாட்களில் அகற்றப்படும். மேம்பாலம் கட்டி முடிந்த பின்னர் போலீஸ் செக்போஸ்ட் கட்டி தரப்படும். அதுவரை தற்காலிக இரும்பு கூடாரத்தில் போலீஸ் செக்போஸ்ட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.