சென்னை, ஜூலை 23: சென்னையில் இரவு நேரங்களில் மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான பல மேம்பாலங்கள் உள்ளன. கோடம்பாக்கம் மேம்பாலம், நேப்பியர் பாலம், அடையாறு, வடபழனி, அசோக் நகர், கத்திப்பாரா, கோயம்பேடு, ராதாகிருஷ்ணன் சாலை என மொத்தம் 33 மேம்பாலங்கள் உள்ளன. இவ்வளவு பாலங்கள் இருந்தாலும் சென்னையில் எப்போதும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்த பாலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு நேரங்களில் முன்பெல்லாம் மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சென்னையில் உள்ள மேம்பாலம் எல்லாம் இரவு நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது. முன்பெல்லாம் இரவு நேரங்களில் பாலங்கள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் சென்னையில் சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள், மின் இணைப்பு பணிகள் போன்ற பணிகள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த மேம்பாலங்கள் இரவு நேரத்தில் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்தை எளிதாக்க வாகன சோதனையை சென்னை போக்குவரத்து காவல்துறை வெகுவாக குறைத்துள்ளது. முன்பெல்லாம் 200 மீட்டருக்கு ஒரு வாகன சோதனை என போலீசார் இருப்பதால் பொதுமக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் வாகன ஓட்டிகளின் சீரமத்தை சென்னை காவல்துறை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதே சமயம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.