சேலம்: சேலம் மாவட்ட மேட்டூர் அருகே மான் வேட்டைக்கு சென்றவர் கார்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேட்டூர் அருகே மலையோர கிராமங்களில் வசிப்பவர்கள் பரிசலில் பாலாற்றை கடந்து சென்று கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடுவது வழக்கம். இரு தினங்களுக்கு முன் 2 பரிசல்களில் சென்றவர்கள் பாலாற்றின் கரையில் இருந்தபடியே வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் எல்லோரும் அருகில் உள்ள கிராமங்களுக்கு தப்பி சென்றனர். ஆனால், கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா என்பவரை மட்டும் காணவில்லை. அவர் தூப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிட்டாரா அல்லது கர்நாடக வனத்துறையினர் அவரை பிடித்து சென்று விட்டார்களா என கோவிந்தபாடி கிராமத்தினர் பதற்றத்தில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல வேட்டைக்கு சென்றவரை கர்னாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றதால் வனத்துறைக்கு மக்கள் தீ வைத்தனர். அதனால் தற்போது கர்நாடக வனத்துறையை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. …