கோபி, ஆக. 12: கோபி அருகே உள்ள மேட்டுவலுவு சுப்பணன் வீதியில் வீட்டின் முன்பகுதியில் புகுந்த ஒரு அடி நீளமுள்ள நாகபாம்பு குட்டியை கோபி தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து வனபகுதியில் விட்டனர். கோபி அருகே உள்ள மேட்டுவலுவு சுப்பணன் வீதியை சேர்ந்தவர் ராஜா(35). இவர் கரட்டடிபாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் ராஜா வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் இவரது மனைவி மஞ்சு மற்றும் உறவினர்கள் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு மஞ்சு வீட்டிற்கு வெளியே வந்த போது வீட்டின் முன் பகுதியில் நாகபாம்பு குட்டி ஒன்று இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து பாம்பு இருப்பது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, சிலம்பரசன், சங்கர், ராமச்சந்திர மூர்த்தி, சிசில் உள்ளிட்டோர் விரைந்து சென்று வீட்டின் முன்பு இருந்த நாகபாம்பு குட்டியை உயிருடன் பிடித்தனர். தீயணைப்புத்துறையினர் பாம்பு குட்டியை பிடிக்க முயன்ற போது, படமெடுத்தவாறு பாம்பு பிடிக்கும் உபகரணத்தை ஆவேசமாக கொத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.