மேட்டுப்பாளையம், ஜூன் 7: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஊட்டி, கோவை, திருப்பூர், சத்தி சாலை என நான்கு முக்கிய சாலைகள் சந்திப்பில் காவல் துறையினரின் சிக்னல் உள்ளது. இதில், மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து அன்னூர் வழியாக திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாக்கடை நீர் வழிந்தோடி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து சாலையில் ஓடுவதால் சாலையும் சேதமாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் துர்நாற்றத்தில் தவித்து வருகின்றனர்.
கோவை விமான நிலையம் வரும் முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இச்சாலை வழியாக தான் உதகை செல்ல இயலும். முக்கிய பிரமுகர்கள் வரும் போது மட்டும் குண்டும், குழியுமான சாலைகளை தற்காலிகமாக மூடி கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை தடுக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அதன்பின் இச்சாலையை கண்டுகொள்வதில்லை என வாகன ஓட்டிகள் புலம்பி செல்கின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில். ‘‘பலரும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.