மேட்டுப்பாளையம், ஆக. 27: விலை உயர்ந்த பைக்கில் வந்து டூவீலரில் வைத்திருந்த ஹெல்மெட்டை 2 வாலிபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே குடியிருப்புகள் அதிகம் நிறைந்த கே.கே.நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை வீடு முன்பு நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரில் வந்த ஒருவர் ஹெல்மெட்டை தான் ஓட்டி வந்த வாகனத்தின் மீது வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது டூவீலரில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை காணவில்லை.
இதைத்தொடர்ந்து அவர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் அங்கு வந்தனர். சற்று நேரம் அங்குமிங்கும் நோட்டமிட்டு பின்னர் டூவீலரில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.