மேட்டுப்பாளையம், ஜூலை 31: நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் குறிப்பாக முட்டைக்கோஸ், நூல்கோல், டர்னீப், பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தென் மாவட்டத்தவர் வசித்து வருகின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் நீண்ட தூரம் என்பதால் பேருந்தில் செல்வதற்கு பதிலாக ரயிலில் பயணிக்கவே அதிக அளவில் விருப்பப்படுவர்.
மேலும், ஏற்கனவே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து வாரம் ஒரு முறை திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். துறைமுக நகரமான தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் நீண்ட நாட்களாக ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் அனுப்பிய கோரிக்கை மனுவிற்கு தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பதிலளித்துள்ளார்.
பதிலளித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாரத்திற்கு மூன்று முறை ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்குகளை துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்க இலகுவாக இருக்கும் தென் மாவட்ட மக்களுக்கும் ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.