Wednesday, June 18, 2025
Home மருத்துவம் மூலிகைகளின் அரசன்!

மூலிகைகளின் அரசன்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்து செழித்திருக்கும் திருநீற்றுப்பச்சிலை ஆன்மிகரீதியாக நிறைய பயன்பட்டு வருகிறது. இது மருத்துவரீதியாகவும் எண்ணற்ற பலன்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் காரணமாக மூலிகைகளின் அரசன் என்றே வர்ணிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வித்யாலட்சுமியிடம் இதன் மருத்துவ சிறப்புகள் குறித்து கேட்டோம்…‘‘Ocimum Basilicum என்று தாவரவியலில் திருநீற்றுப்பச்சிலை குறிப்பிடப்படுகிறது. துளசியைப் போல மணம் மிக்க தாவரம் இது. திருநீற்றுப் பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ குணம் கொண்டதாகத் திகழ்கிறது.; உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சியா அல்லது சப்ஜா, இனிப்பு துளசி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளுக்கென்று தனி மணம் உண்டு. அது கற்பூரத்தின் தன்மை கொண்டது. அதில் Linalool, Eugenol, Thymol போன்ற பொருட்கள் இருப்பதே அதற்கு காரணம். திருநீற்றுப்பச்சிலையில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை காணப்படுகின்றன. குறைந்த கலோரிகளை கொண்டுள்ள திருநீற்றுப்பச்சிலையில் பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் காணப்படுகின்றன. இவை ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. அதிகாலையில் இதன் இலைகள் ஐந்தினை எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும் இதன் சாற்றினை சாப்பிடுவதன் மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வலி குறையும். அதேபோல இதன் விதையை நீரில் ஊற வைத்து, பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும். இந்த இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். இதன் சாற்றினை காதில் விட காது வலி குறையும், மூக்கில் விட மூக்கடைப்பு தீரும். இலைகளை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை பிரச்னைகள் சரியாவதுடன் மூக்கு தொடர்பான சின்னச்சின்ன பிரச்னைகளும் சரியாகும். திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறு வாந்தி, சுரம் ஆகியவற்றைப் போக்கும். காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். இதன் இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், வயிறு தொடர்பான வாயு பிரச்னைகள் சரியாகும். முகப்பருவை விரட்ட இதன் சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். இதன் இலையை அரைத்து இரவில் கட்டியில் பற்று போட்டு வர கட்டிகள்; உடையும். தேள் கடியினால் வலி ஏற்படும் போது, அதன் கடிவாயில் இதன் இலையை கசக்கி பூசினால் வலி குறையும். ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இதன் இலையை தாய்ப்பால் விட்டு மென்மையாக அரைத்து அதிகாலையில் வலியுள்ள; பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். சப்ஜா விதை என்று அழைக்கப்படுகிற திருநீற்றுப்பச்சிலையின் விதையை 5 கிராம் அளவு எடுத்து, அதை தண்ணீரில் 3; மணி நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல் உஷ்ணம் குறையும். மேலும் சீதபேதி, வெள்ளை, வெட்டை, வெட்டைச்சூடு, இருமல், வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளும் சரியாகும். இந்த விதைகள் வயிற்றுப் போக்குக்கு தீர்வு காண உதவுகிறது. இந்த விதையை கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு; சுறுசுறுப்பு கிடைக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இந்த தாவரத்தின் மலரானது மிகவும் சக்தி வாய்ந்தவை. அது அஜீரணம் மற்றும் மூத்திர கடுப்பைப் போக்கும் தன்மையுடையது. இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும் அருமருந்தாக பயன்படுகின்றன. இதிலுள்ள Carminative வயிற்றுப் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. Diuretic சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. மேலும் இதிலுள்ள Antispasmodic வலி நிவாரணியாக பயன்படுகிறது. இந்த தாவரத்தின் வேரானது காய்ச்சலைத் தணிக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். இதன் வேரை இடித்து பொடித்து கஷாயம் செய்து காலையும், மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும். சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் மக்களின் நோய் தீர்ப்பதில் திருநீற்றுப்பச்சிலைக்கென்று தனித்த ஓர் இடம் உண்டு. இந்த தாவரம் பார்ப்பதற்கு துளசி போன்று காட்சியளித்தாலும் தனக்கென்று தனித்துவமான பல்வேறு மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதன் இலை, பூ, விதை, வேர் என்று அனைத்து பாகங்களும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை உடையது. எனவே, இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில் பயன்படுத்தினால், அதன் பலனை நாம் முழுமையாக பெற்று, நோய்களை குணப்படுத்தி நலமுடன் வாழலாம்.’’;க.கதிரவன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi