வேலூர், ஜூலை 3: ஆடி மாதத்தை முன்னிட்டு 5 வெள்ளிக்கிழமைகளில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப மூத்த குடிமக்களை இலவசமாக அறுபடை வீடு, வைணவ தலங்கள் என ஆன்மிக பயணம் அழைத்து செல்கிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு வரும் 18ம் தேதி, 25ம் தேதி, ஆகஸ்ட் 1ம் தேதி, ஆகஸ்ட் 8ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி என ஐந்து வெள்ளிக்கிழமைகளில் ஆன்மிக பயணம் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இந்து சமய அறநிலையத்துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பயணங்கள் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 7 நகரங்களில் இருந்து தொடங்குகிறது. ஆன்மிக பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ள 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் மேற்கண்ட ஊர்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உட்பட பிற இணை ஆணையர் மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள் பயணத்திட்டம் துவங்கும் நாளில் மேற்கண்ட ஊர்களில் சென்று பயணத்தில் இணைந்து கொள்ளலாம். ஆன்மிக பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்று வட்டாட்சியரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இப்பயணத்தை ஒரு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும். மேலும் ஆன்மிக பயணம் மேற்கொள்ள விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வயது சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரி சான்று, ஆதார் மற்றும் பான் கார்டு நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பயணம் மேற்கொள்பவர்கள் தங்களுடன் குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை. விண்ணப்பங்கள் இணை ஆணையர் மண்டல அலுவலகங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் பயணத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளிக்கிழமைகளுக்கு முன்னதாக 11.07.2025, 18.07.2025, 25.07.2025, 1.08.2025, 8.08.2025 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.