பாலக்காடு,ஜூலை4: பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா வண்டித்தாவளம் அருகே உள்ள மருதன்பாறையைச் சேர்ந்த சாமுன்னியின் மனைவி லட்சுமி (63). இவர் நேற்று முன்தினம் மருதன்பாறை-ஐயப்பன்காவு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இவர்களின் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மர்ம நபரின் பைக்கை பின் தொடர்ந்து சென்று வண்டித்தாவளம் அருகே ஏந்தல்பாலம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து மீனாட்சிபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் மர்ம நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் நன்னியோடு அருகே ஏந்தல்பாலத்தைச் சேர்ந்த அனில்குமார் (45) என தெரியவந்தது. தொடர்ந்து மூதாட்டியின் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. அனில்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.