மூணாறு, ஆக.17: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மூணாறைச் சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தேயிலைத் தோட்டங்களின் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட்டில் உள்ள ஈஸ்ட் டிவிஷனில், ஒற்றை காட்டெருமை ஒன்று தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே அடிக்கடி சுற்றித் திரிவதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், பகல் நேரங்களில் கூட குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காட்டெருமைகள் மூணாறில் தொழிலாளர்களை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. எனவே, காட்டெருமை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.