மூணாறு, செப். 6: கேரள மாநிலம் மூணாறில் கடந்த சில மாதங்களாக பெய்த கனத்த மழையில் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள பல சாலைகளும் சேதமடைந்தது. மூணாறில் இருந்து பல எஸ்டேட் பகுதிகளுக்கும் செல்லும் சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மூணாறு-சைலண்ட்வாலி மற்றும் மூணாறு-லட்சுமி எஸ்டேட் சாலைகள் சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டு தாரிங் வேலைகள் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அந்த சாலைகள் மீண்டும் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு மூணாறு மண்டலம் கமிட்டி தலைமையில் சாலையில் உள்ள குழிகளில் நீளம் தாண்டும் போட்டி நடத்தப்பட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. எ.ஐ.வை.எஃப். மண்டலம் குழு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கிய போட்டியை ஏ.ஐ.ஒய்.எஃப் மாநிலக் குழு உறுப்பினரும் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருமான ஆஷா ஆண்டனி துவக்கி வைத்தார்.