நன்றி குங்குமம் தோழிபருவநிலை மாற்றம் காரணமாக மனித உடல் அதிக வெப்பம் அல்லது குளிர்ச்சி அடையும் போது சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குளிர்காலங்களில் பெரும்பாலானோர் அதிகமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். முக்கியமாக குளிர்காலங்களில் ஏற்படும் ஈரப்பதம் காரணமாக மூட்டு வலி பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பிரச்னையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “இயல்பாகவே முதியவர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக மூட்டுவலி பிரச்னை இருக்கும். குளிர்காலங்களில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் குளிர்ச்சியால் உடலில் உள்ள வாதத்தின் தன்மை அதிகரிக்கும்.‘வாயு இல்லாமல் வலி இல்லை’ ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். வாதம்தான் வலிக்கு காரணம். உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் அதற்கு வாயுதான் காரணம் என்று ஆயுர்வேத சித்தாந்தமாக இருக்கிறது.குளிர்காலங்களில் வாதம் அதிகரிப்பதால் ஏற்கனவே வலி இருந்தாலும், புதிதாக வலி ஏற்பட்டாலும் அதன் வீரியம் அதிகமாக இருக்கும். தாங்க முடியாத வலியால் கூட சிலர் துடிப்பதை நாம் பார்த்திருப்போம். எலும்பு மஜ்ஜைகளில் உள்ள எண்ணெய் பசை குறையும் போது எலும்பு தேய்மாணம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது” என்று மூட்டுவலி ஏற்படக்கூடிய காரணங்களை விளக்கியவர் குளிர் காலங்களில் ஏற்படும் மூட்டுவலியை எப்படி நாம் எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றி பேசினார்.* குளிர் காலங்களில் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், குளிர்ச்சியான கீரைவகைகள் போன்றவற்றை இந்த காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். * ஏசியில் உறங்குவது வேண்டவே வேண்டாம். * உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக்கொள்வது நல்லது. கம்பளி அல்லது ஸ்வட்டர் அணிந்துக்கொண்டு உறங்கலாம். * காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளலாம். * குடிப்பதற்கும் குளிப்பதற்கும் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். * கற்பூரத்தை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து குளிக்கலாம்.* கற்பூராதி தைலம், பிண்ட தைலம், ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தி குளிக்கலாம்.* ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்து இலை, எருக்க இலை போன்றவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்கலாம். இது போன்ற சிறு சிறு முறைகளை கையாண்டு உடலில் கதகதப்பை தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்று டிப்ஸ் கொடுத்தவர், வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய வகை சிகிச்சை முறையை விளக்கினார்.முருங்க இலை, வாதநாராயண இலை, நொச்சி இலை போன்றவற்றை சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவு்ம. இதனுடன் பூண்டு, இரண்டு எலுமிச்சை பழம், சிறிதளவு மஞ்சள் சேர்த்து வேப்பெண்ெணயில் வறுக்க வேண்டும். வறுத்த பொருட்களை சுத்தமான துணியில் மூட்டையாக கட்டிக் கொள்ளவும். கடாயில் கற்பூர எண்ணெயை சூடுபடுத்தி ஏற்கனவே கட்டிவைத்திருக்கும் சிறிய மூட்டையை தொட்டு மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்கலாம். நாம் தயாரித்து வைத்திருக்கும் மூலிகை மூட்டையை நான்கு நாள் பயன்படுத்தலாம். அதற்குபின்பு மீண்டும் அதே போன்று தயார் செய்து பயன்படுத்தலாம்.இந்த ஒத்தட சிகிச்சை 20 நிமிடங்களில் இருந்து 40 நிமிடம் வரை செய்ய வேண்டும். சாப்பிடுவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் செய்யவேண்டும்.தீவிர வலி உடையவர்கள் 40 நாட்கள் இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். சாதாரண மூட்டு வலி உடையவர்கள் 7 லிருந்து 14 நாட்கள் ஒத்தட சிகிச்சையை மேற்கொள்ளலாம். மூட்டு வலி ஏற்படாமல் இருக்கவும் இந்த சிகிச்சை நல்ல பயன்தரும். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண் பெண் அனைவரும் பணிக்குச் சென்று பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அலுவலகப்பணியில் இருக்கும் பெண்கள், இருசக்கர வாகனம் ஓட்டக்கூடிய பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் இந்த சிகிச்சை நல்ல பயன் தரும். குளிர்காலங்களில் கிழங்கு வகைகள் அதிகம் கிடைக்கும். கிழங்கு சாப்பிட்டால் மூட்டு வலி ஏற்படும் என்பார்கள். இந்த காலகட்டங்களில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து சாப்பிடும் போது எந்த பிரச்னையும் வராது. உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்” எந்த உணவை உட்கொள்வதாக இருந்தாலும் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.-ஜெ.சதீஷ்…
மூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்!
previous post