நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக நாம் மூக்கு பற்றி அதிகம் பேசுவதில்லை. அது பற்றிய தகவல்களும் அவ்வளவாக வெளிவருவதில்லை. நாம் உயிர் வாழ முக்கியத் தேவையான, சுவாச மண்டலத்தின் மிக முக்கியமான பகுதியான மூக்கு பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?! மூக்கின் உட்புறம் கோழை மற்றும் முடியினால் சூழப்பட்டுள்ளது. மூச்சுக்காற்று சூடாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் காணப்பட்டு பாக்டீரியா அல்லது அழுக்கு நுரையீரலைச் சென்றடையும் முன்பு வடிகட்டப்பட்டுவிடுகிறது. மூக்கு, நுகர்தலுக்கான உறுப்பும்கூட. அது சைனெஸஸ் (Sinuses) எனும் காற்றுக் குழியறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.* சைனஸ் அழற்சி என்பது மூக்கிற்குள் திறக்கும் சைனஸிஸ் எலும்பில் உள்ள, குழிப்பையில் ஏற்படும் திடீர் அல்லது நாள்பட்ட அழற்சி ஆகும். இது ஒவ்வாமையினாலோ தொற்றினாலோ அல்லது இவை இரண்டினாலுமோ உண்டாகலாம். * கெட்ட வாசனையுடன் கூடிய மூக்கில் கெட்டியான கோழையால் மூக்கு அடைத்துக் கொள்ளும்போது தலைவலி உண்டாகலாம். சில நேரங்களில் காய்ச்சல் இருக்கலாம்.* சளி ஏற்பட்டு மூக்கடைப்பும் இருக்கும்போது, மூக்கைச் சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள். சிறிதளவு உப்பு நீரைக் கையில் ஊற்றி மூக்கினுள் உறிஞ்சுங்கள். இது சளியை இளகச் செய்ய உதவும். சாதாரணமான தண்ணீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது சுகாதாரமான தண்ணீராக இருக்க வேண்டியது அவசியம். * மூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாகப் பலருக்கும் ஏற்படுகிறது. இது அதிகம் தொல்லை கொடுக்கக் கூடியதெனினும் இது மிகப்பெரிய மருத்துவப் பிரச்னை அல்ல. ஆனால், இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது என்பதில் பிரச்னையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.* குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் மூக்கினுள் உள்ள நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஆரம்பமாகிறது. இந்த நடுச்சுவரே உங்கள் மூக்குக் குழியினை இரண்டாகப் பிரிக்கிறது. நடு வயதினருக்கும் வயதானவர்களுக்கும் நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உள் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால், இவ்வகை ரத்தக்கசிவுகள் அரிதானவையே. இவை தடித்த ரத்த நாளங்களாலும் ரத்த மிகை அழுத்தத்தாலும் ஏற்படலாம். * சில சமயம் மூக்கில் ரத்த ஒழுக்கு தானாக ஏற்படுகிறது. இதனை நிறுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும். இதற்கு மருத்துவரின் உதவி தேவைப்படும்.* மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டவுடன் உட்கார்ந்து விடுங்கள். இது மூக்கின் சிரைகளில் உள்ள ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தம் வெளியேறுவதையும் குறைக்கும்.* மூக்கைப் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு வாயால் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். இது நடுச்சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த வெளியேற்றத்தை நிறுத்தும்.* சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ளவாறு பார்த்துக் கொள்வது, மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படும். * ஒருமுறை மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டு நின்ற பிறகு, மூக்கைக் குடைவது, சிந்துவது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. சில மணி நேரங்களுக்குக் குனியக்கூடாது. இதயத்தைவிடத் தலையை உயரமாக வைத்துக் கொள்ளவும்.* மீண்டும் ரத்த ஒழுக்கு ஏற்பட்டால், அழுத்தமாக மூக்கை உள்புறமாக உறிஞ்சுவதால் உள்ளே ரத்த உறைவுக் கட்டிகள் நீங்கிவிடும். மீண்டும் ரத்தப்போக்கு இருப்பின் மேலே கூறியபடி மீண்டும் மூக்கை அழுத்திப் பிடித்து வாயால் சுவாசிப்பதுடன் மருத்துவ உதவியை நாடவும்.;; 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ரத்தக்கசிவு நீடித்தாலோ, பாதிப்புக்குள்ளானவர் தளர்வாகவோ மயக்கம் வருவதுபோலவோ உணர்ந்தாலோ மருத்துவ உதவி அவசியம். * அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.* ஒருவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டினால் நாசித் துவாரங்களினுள் தினமும் வாசலின் தடவவும். அல்லது உப்பு நீரை முகரவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற (வைட்டமின் சி அடங்கிய) பழங்களைச் சாப்பிடுவது சிரைகள் வலுப்பெற உதவும். *; குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தில்லாக் கட்டிகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இது பெண்களைக் காட்டிலும் பருவ வயது ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பருவ வயது தாண்டியதும் இது தானாகச் சரியாகிவிடும். ஆனால், சிலருக்குக் கட்டிகள் வளர்ந்து மூக்குத் துவாரத்தையும், சுவாசப் பாதையையும் அடைத்து வேறு அறிகுறிகளையும், ரத்த ஒழுக்கையும் ஏற்படுத்தலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகள் தானாகச் சுருங்காதபோது மருத்துவரை அணுகவும். அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்.* மூக்கடைப்பானது மூக்கின் சளிச்சவ்வுப் படலங்களில் நீர் தேங்கி இருப்பதுடன், அடைப்பு ஏற்படுத்தி மூச்சு விட சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் மூக்கடைப்பு தொல்லை கொடுக்கும் ஓர் அறிகுறியாகவே இருக்கும். மூக்கடைப்பு சளிச்சவ்வுக் கட்டிகள், கட்டிகள், பெருத்த அடினாய்டுகள், வெளிப்பொருட்கள் அடைப்பாலும் ஏற்படுகிறது. மூக்குப் பாதை அமைப்பில் மாறுபாடுகள் மூக்குக்குழியின் இரு பக்கத்தையும் குருத்தெலும்பு மற்றும் எலும்பு ஆகிய இருவகைகளாலான தடுப்புச்சுவர் பிரிக்கிறது. இந்த நடுச்சுவர் காயம் காரணமாக இயல் பமைப்பிலிருந்து மாறுபட வாய்ப்புள்ளது. *; ஒவ்வாமை காரணமாக மூக்கின் சளிச்சவ்வுப் படலத்தில் அழற்சி ஏற்படும். ஒவ்வாமையைத் தூண்டும் பொருட்களான மகரந்தம், வீட்டுத் தூசு போன்றவை காற்றில் கலந்து மூக்கு வழியாக இவை உள்ளே நுழைகின்றன. நாள இயக்க மூக்கழற்சி இது விட்டு விட்டு ஏற்படும் மூக்கழற்சியாகும். புகை, குளிரூட்டும் இயந்திரங்கள் மற்றும் கடும் உடற்பயிற்சியினால் ஏற்படும்.* மூக்கில் சளியும், சளி உறைவும் தேங்கினால் தினமும் மென்மையாக மூக்கைச் சிந்தவும். அடிக்கடி மூக்கடைப்பைச் சரிசெய்யும் சொட்டு மருந்தையோ தெளிப்பான் வகை மருந்துகளையோ பயன்படுத்தினால் தொடர்ந்து அதனைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடலாம்.* நீண்ட நாட்கள் இவ்வகை மருந்துகளைப் பயன்படுத்துவதால் மூக்கினுள் உள்ள சளிச் சவ்வுப் படலம் பாதிக்கப்பட்டு நாற்றம் அல்லது எரிவது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். இது நாள்பட்ட அழற்சியின் அறிகுறியாகும். இதனைத் தடுக்கச் சிறந்த வழி மூக்குச் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தாதிருப்பதே ஆகும். அப்படி பயன்படுத்தினாலும் மூக்கடைப்பிற்கான சொட்டு மருந்துகளை 3 முதல் 4 நாட்களுக்குமேல் பயன்படுத்தாதீர்கள்.* மூக்கு சொட்டுமருந்துக்குப் பதிலாக உட்கொள்ளும் மருந்துகளைப் பயன்படுத்தலாம். முதலில் மூக்கடைப்பு உடனடியாகச் சரியாகாவிடினும், சில வாரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைமை திரும்பக்கூடும். * சைனஸ் என்பது எலும்பு உட்புழைகளில் அல்லது மண்டை ஓடு மூக்குடன் சேர்கிற பகுதியிலுள்ள துவாரங்களில் உண்டாகிற சுழற்சியாகும். வலி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை சைனஸ் அழற்சியாக இருக்கலாம்.* கைக்குழந்தைகளுக்கு புட்டிப்பால் தர வேண்டாம். அப்படி தர வேண்டுமானால் குழந்தையை மல்லாந்து படுக்க வைத்துப் பால் தர வேண்டாம். ஏனென்றால் பால் மூக்கு வரை சென்று காதில் தொற்று ஏற்படக் காரணமாகலாம். தொகுப்பு: க.இளஞ்சேரன்
மூக்கு பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
previous post