மஞ்சூர், ஜூன் 3: முள்ளிமலை மகாலிங்கையா சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிமலையில் மகாலிங்கையா சுவாமி கோயில் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்த பெற்ற இந்த கோயில் 95 ஆண்டுகள் பழமையானதும் முள்ளிமலை, மேல்குந்தா உள்ளிட்ட ஆறு படுகரின கிராமங்களில் வசிக்கும் மக்களின் முக்கிய கோயிலாக உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு நடத்த பொதுமக்களால் தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பணிகள் அனைத்தும் பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேத மந்திரங்கள் முழுங்க 108 குடங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீரை கோயில் கலசங்களில் ஊற்றி சிவாச்சரியர்கள் குடமுழுக்கு நடத்தினார்கள். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து மகாலிங்கையாவிற்கு பல்வேறு அபிஷேகங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை முள்ளிமலை ஊர் பொதுமக்கள் செய்திருந்தார்கள்.