நாகர்கோவில், நவ.18: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கிள்ளியூர் தாலுகா, முள்ளங்கினாவிளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம், முதற்கட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சியானது, முள்ளங்கினாவிளை அரசு உயர்நிலை பள்ளியில் நவம்பர் 19ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகின்றன. எனவே முள்ளங்கினாவிளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.