திருவாரூர், மே 14:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீ மகாகாளியம்மன் கோயிலில் நவதானியத்தால் ஆன சப்த கன்னி உருவங்களுடன் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா அச்சுதம்பேட்டையில பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. ஊர் கோயிலான இந்த கோவிலுக்கு சொந்தமான சந்தைபேட்டையில் திரிசூலம் இருக்கும் இடத்தில் உள்ள அரசம் மரம் மற்றும் வேப்ப மரம் உள்ளது.
இந்த மரங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு வளர்ந்துள்ளது. இந்த இரு மரத்திற்கும் விருச்சமான திருமண வைபோகம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் விவசாயம் செழிக்க வளர்ந்த நவதானிய பயிர்களை கொண்டு சப்த கன்னியான காளியம்மன், அங்காளம்மன், மாரியம்மன், பிடாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், நாகாத்தம்மன் ஆகிய சுவாமி உருவங்கள் மற்றும் கருப்புசாமி பால் காவடி, நாகம் உள்ளிட்ட வகைகள் நவதானியாத்தால் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் மேலதாலங்கள் முழங்க ஆட்ட காவடி மாரியம்மன் வேடம் அணிந்து நடமாடி ஊர்வலமாக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியதுடன் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.