திருமங்கலம், செப். 2: மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால், எலியார்பத்தி டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரை நான்கு வழிச்சாலை செல்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 54 டோல்கேட்டுகளில், குறிப்பிட்டவற்றுக்கு ஒரு தேதி, மற்றவைக்கு வேறு தேதி என ஆண்டுதோறும் இரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதில் செப்டம்பர் 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்படுவதில் எலியார் பத்தி டோல்கேட்டும் ஒன்று. இதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன்படி எலியார்பத்தி டோல்கேட்டிலும் கட்டண உயர்வு இருக்கும் என நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே, மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி பல இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனோட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எலியார் பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை அதிரடியாக நிறுத்தி வைத்தனர். இதனால் இந்த டோல்கேட்டில் பழைய கட்டணமே தொடரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் வரவேற்றுள்ளனர்.