மாதவரம், ஜூன் 7: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் மேலாண்மை, சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சியை, மேயர் பிரியா நேற்று ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.
பின்னர், மேயர் பிரியா கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம், கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் மேலாண்மை என்ற 2 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிக முக்கியத்துவம், நடுத்தர முக்கியத்துவம் மற்றும் குறைந்த முக்கியத்துவம்.
ஒரு ஏக்கருக்குள் கட்டுமானம் மேற்கொள்ளும்போது, 6 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் என்றால், 10 மீட்டர் உயரத்தில் உலோகத்தால் தடுப்பு அமைக்க வேண்டும்.
கட்டிட இடிபாடுகளால் தூசி பரவுவதை தடுக்க அடர்த்தியான துணி, தார்பாய் இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூட வேண்டும். தூசி பரவாமல் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
கட்டுமான இடிபாடுகளை மாநகராட்சி வழிகாட்டுதலின்படி, அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட வேண்டும். நடைபாதை, சாலையோரம் கொட்டக் கூடாது.
இடிபாடுகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது, தார்பாயினால் மூடி கொண்டு செல்ல வேண்டும். வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சான்று அவசியம்.
கட்டுமானப் பணி இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும.
கட்டிடத்தின் உயரம் 18.5 மீட்டருக்கு மேல் இருந்தால், சென்சார் அடிப்படையில் காற்று மாசை கண்டறியும் கருவி பயன்படுத்த வேண்டும்.
கட்டிட இடிபாட்டுப் பணிகள் முடிவுற்றவுடன் உடனுக்குடன் கட்டிட இடிபாட்டு கழிவுகள் அகற்றிட வேண்டும்.
சுத்தமான மற்றும் பாதுகாப்பான வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டுதல்களை மீறினால், 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு கட்டிட கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சமும், 500 ச.மீட்டர் முதல் 20 ஆயிரம் ச.மீட்டர் பரப்பளவிற்கு கட்டிட கட்டுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 300 ச.மீட்டர் முதல் 500 ச.மீட்டர் பரப்பளவிற்கு கட்டிட கட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
நடுத்தர/ குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டுதல்களை மீறினால், 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு கட்டிட கட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், 500 ச.மீட்டர் முதல் 20 ஆயிரம் ச.மீட்டர் பரப்பளவிற்கு கட்டிட கட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதமும், 300 ச.மீட்டர் முதல் 500 ச.மீட்டர் பரப்பளவிற்கு கட்டிட கட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதிக/ நடுத்தர/குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டுதல்களில் விதி மீறல்கள் ஏற்பட்டால், மீறல்களை சரிசெய்வதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு அதை சரி செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். 15 நாட்களுக்கு பிறகும் சரிசெய்யாவிட்டால் மட்டுமே பரப்பளவிற்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு அதன் பிறகும் சரிசெய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்கள், ஒரு மெட்ரிக் டன் வரை கட்டிட கழிவுகள் உருவாக்குபவர்கள் நம்ம சென்னை செயலி மற்றும் 1913 தெரிவித்தால் மாநகராட்சியே இலவசமாக அகற்றும்.
சிறிய அளவில் கழிவுகள் உருவாக்குபவர்கள் தங்கள் கழிவுகளை சென்னை மாநகராட்சியின் செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லவும், அதற்கு ஒரு டன்னிற்கு ரூ.800 செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
பெருமளவு கழிவுகள் உருவாக்குபவர்கள் கட்டிட இடிபாட்டு கழிவுகளை முறையற்ற வகையில் மழைநீர் வடிகால், தெருக்கள், திறந்த வெளி மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுப் பகுதிகளில் கொட்டுபவர்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.5000, சிறிய அளவில் கழிவுகள் உருவாக்குவோர் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு முறையற்ற வகையில் கழிவுகளை கொட்டினால் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்படும்.