வருசநாடு, ஜூன். 10: மயிலாடும்பாறை அருகே அருகவெளி, கருமலை சாஸ்தாபுரம், மூலக்கடை, உப்புத்துறை, கருப்பையாபுரம், தங்கம்மாள்புரம், தர்மராஜபுரம், வருசநாடு, சிங்கராஜபுரம் பசுமலைத்தேரி உள்ளிட்ட கிராமங்களில் முருங்கை பீன்ஸ் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போதுமான அளவு மழை பெய்துள்ளதால் இந்த சீசனில் முருங்கை பீன்ஸ் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் முருங்கை பீன்ஸ் விலையும் சந்தையில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ முருங்கை பீன்ஸ் தற்போது 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் சந்தைகளில் பீன்ஸ் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.