ஓமலூர், ஜூலை 4: ஓமலூர் அருகே முருகன் கோயிலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடித்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செல்லப்பிள்ளைக்குட்டை கிராமத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 30ம் தேதி பூஜை வழிபாடு முடிந்ததும், வழக்கம் போல் பூசாரி கோயிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை கோயிலுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்கள் திடுக்கிட்டனர்.
உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் மாயமாகியிருந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சுவாமிக்கு முன் நடப்பட்டிருந்த வெள்ளி வேலை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில், ஒமலூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயிலுக்குள் புகுந்து திருடியவர்களை கண்டுபிடித்து, உடனடியாக வெள்ளி வேலை மீட்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.