மயிலாடுதுறை, ஜூலை 4: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பொதுக்கூட்டம் திமுக சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்பொழுது, ஒன்றிய பாஜக அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எட்டாம் வகுப்பு பொது தேர்வு என மாணவர்களின் கல்வியில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது, மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாய் ஒதுக்க முடியாது என ஆணவத்துடன் தெரிவிக்கின்றனர் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.