வேலூர், ஜூன்18: நாடுமுழுவதும் அறிவியல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. மனிதர்கள் செய்த ஒட்டுமொத்த வேலையையும் நவீன தொழில்நுட்பம் மூலம் நொடிப்பொழுதில் செய்து முடித்துவிடலாம். அதேபோல், அதே அசுர வேகத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தான் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சைபர் கிரைம் பிரிவு காவல்நிலையங்கள் தொடங்கி, சைபர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படிவேலூர் மாவட்டத்திலும் எஸ்பி அலுவலகத்தில் சைபர்கிரைம் பிரிவுபோலீசார் எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அணைக்கட்டு அருகே உள்ள பொய்கை மோட்டூரைச்சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து சிபிஐ போலீசார் பேசுவதாக கூறினர். அவர்கள் சென்னையில் பயிலும் எங்களது மகள் மணிலான்டரிங் செய்துள்ளதாக (பணமோசடி) கூறினர். மகளை கைது செய்யாமல் இருக்க உடனே ரூ.45ஆயிரம் அனுப்புமாறு தெரிவித்தனர். அதன்பேரில் ஆன்லைனில் ரூ.45ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தோம். பின்னர் தான் மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது. எனவே பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அதேபோல் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த நபர் அளித்த புகாரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்காங் சென்றபோது கிரெடிட் கார்டு பயன்படுத்தினேன். கிரெடிட்கார்டு எண்களை வைத்து ரூ.90ஆயிரம் வரையில் பணத்தை எடுத்துள்ளனர். எனவே எனதுபணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘போலீசார் பேசுகிறோம், உங்களது உறவினரையோ, மகன், மகளையோ கைது செய்கிறோம் உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று கூறுவது, மேலும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்று கூறி மோசடி இதுபோன்று செல்போனில் தொடர்புகொண்டு பேசும் நபர்களை புறக்கணியுங்கள், அவர்களிடம் பேசி பணத்தை இழக்காதீர்கள். அதேசமயம் வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு ஓடிபி எண் வராது, எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், உடனே கிரெடிட் கார்டு ஆப்ஸ்சை ஆப் செய்துவிட வேண்டும். மாறாக ஆன் செய்து வைத்திருபவர்களது பணம் எடுக்கப்படுகிறது. எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றனர்.