Saturday, June 3, 2023
Home » முப்புரம் சாய்த்தலின் தத்துவம் யாது?

முப்புரம் சாய்த்தலின் தத்துவம் யாது?

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் அபிராமி அந்தாதி- சக்தி தத்துவம்சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து மூன்று ஊர்களின் வடிவான அசுரர்களை அழித்ததை இங்கு குறிப்பிடுகிறார் பட்டர். யார் அந்த அசுரர் எப்பொழுது எப்படி, ஏன் என்பதை இங்கே “சிவ மஹா’’ புராணம் விளக்குகிறது. அதை சற்று விரிவாய் இங்கு காண்போம்.தரன் என்ற அசுரன் பெற்ற குமாரனாகிய தாரகாசூரனை முருகப்பெருமான் போர்முனையில் கொன்ற பிறகு அவனின் புதல்வனாகிய வித்யுன்மாலி, தாரகாஷன், கமலாஷன் ஆகிய மூவரும் கடுந்தவம்புரியத் தொடங்கினார்கள். அவர்கள் செய்த தவத்தின் பலனாய் பிரம்மதேவர், அவர்கள் மூவர் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த அசுரர், மூவரும் நாங்கள் எந்த ஓர் உயிரினத்தினாலும் இறவாத வரம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரம்ம தேவர், இறவாவரத்தை தவிர வேறு ஏதேனும் வரத்தை கேளுங்கள் என்றார். அவ்வசுரர்களும் நாங்கள் நினைத்த இடத்திற்கு பறந்து போக பொன், வெள்ளி,இரும்புகளால் ஆகிய மூன்று பட்டணங்கள் வேண்டும் என்று கேட்டனர்.அவை ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே ஒன்று சேர வேண்டும். அந்த சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றின் முப்புரங்களையும் அழிக்க வல்லவன் எவனாவது இருந்தால், அவனால் மட்டுமே நாங்கள் மடிய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர். அதற்கு பிரம்ம தேவரும் அப்படியே தந்தோம் என்று கூறிவிட்டு, திரிபுர கோட்டையை நிர்மாணித்து கொடுக்க, மயன் என்னும் தச்சனைக் கொண்டு பொன், வெள்ளி, இரும்புகளாலாகிய மூன்று பட்டணங்களை வடிவமைத்து கொடுக்க கட்டளையிட்டார். அதன்படியே பொன் பட்டணத்தை தாருகாட்சனுக்கும், இரும்பு நகரத்தை வித்யுன் மாலிக்கும், வெள்ளிப்பட்டணத்தை கமலாட்சனுக்கும் கொடுத்தான் மயன்.அசுரர்கள் பெற்ற வரத்தைக் கொண்டு, அவர்கள் விரும்பிய போதெல்லாம் இடம்பெயர்ந்து அவர்கள் விரும்பிய இடத்திற்கு போய்சேர்ந் தனர். அச்சமயத்தில் பல கோடி ஜீவராசிகளும் மாண்டு மடிந்தன. அசுரர்களை தங்களால் ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரமும், துயரமும் கொண்ட தேவர்களும், ரிஷிகளும் மனம் நொந்து படைப்புகடவுளாகிய பிரம்மாவிடம் இதற்கு ஒரு தீர்வு காணும்படி வேண்டினர். பிரம்மாவின் ஆலோசனையின் பேரில், தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, நந்திக்கொடியுடைய சிவபெருமானிடம் விரைந்து சென்று தங்கள் விண்ணப்பத்தைத் தெரிவித்தார்கள். தேவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் விஸ்வகர்மனை அழைத்தார். இரதம், தனுசு, பாணங்களை உறுதியுள்ளவைகளாக செய்ய சொன்னார். அப்படிச் செய்தால் திரிபுரங்கள் சீக்கிரமே அழிந்துவிடுவதாகவே கருதலாம் என்று கூறினார். அவர் கூறியபடியே, விஸ்வகர்மன் துன்புறுவோரை காக்கும் பொருட்டு சர்வ வல்லமை கொண்ட திவ்ய மங்களமான இரதம் ஒன்றைச் செய்து முடித்தான். அந்த இரதத்தில் சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து வாசுகியான பாம்பை நாணாக பூட்டி விஷ்ணுவை அஸ்திரமாக கொண்டு (அம்பாக) அந்த அம்பில் அக்னிதேவன் சல்லியமாகவும் (அம்பின் முனைப்பகுதி) வேதங்கள் நான்கும் நான்கு குதிரைகளாகவும் துருவன் முதலிய நட்சத்திரங்கள் அலங்காரமாகவும் இருந்தன.முப்புரங்கள் ஒன்றுசேர்ந்த அந்த நிமிடத்தில், சிவபெருமான் தயாராக இருந்த வில்லைக் கொண்டு அம்பெய்தி அசுரர்களை அழித்து விடுவார் என்று எண்ணியபோது, தேவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட ரதத்தில் ஏறி அவ்வசுரர்களை முறைப்படி அழிக்க பிரம்ம தேவன் வேண்டுகோள் வைக்க, சிவபெருமான் தயார் செய்து வைத்த இரதத்தில் ஏறி அம்பை எய்தார். அந்த அம்பு திரிபுரங்களை அழித்து சிவபெருமானிடமே மீண்டும் வந்தது. பலகோடி சேனைகளுடன் கூடிய திரிபுரங்கள் ஒரே அஸ்திரத்தால் எரிந்து சாம்பலானது. இதையே அபிராமி பட்டர், “தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து” என்று குறிப்பிடுகிறார்.தத்துவ சாஸ்திரமானது மூன்று ஊர் என்பதை மூன்று உடல் என்கிறது. அந்த மூன்று உடலும் ஆன்மாவிற்கு உடலுணர்வு, உள்ளுணர்வு, அறிவுணர்வு என்ற மூன்றையும் தருகிறது. நான் ஆண், நான் பெண் என்பது உடலுணர்வு. நான் கோபமாக இருக்கிறேன், நான் அன்பாக இருக்கிறேன் என்பது உள்ளுணர்வு. நான் பொறி யாளர், நான் மருத்துவன் என்பது அறிவுணர்வு. இந்த மூன்று உணர்வும் சேர்ந்துதான் முப்புரம். அதைத் தாண்டி இறையருளால் பெறுவது உயிர் உணர்வு. அந்த உயிர் உணர்வை தோற்றுவிப் பவள் உமையம்மை. அதனால்தான், திருவதிகையில் அவளுக்கு திரிபுரசுந்தரி என்று பெயர். சிவபெருமானுக்கு வீரட்டேஸ்வரர் என்று பெயர். இந்த சிவனுடன் கூடிய உமையம்மையை வணங்கினால், ஆன்மஞானம் பெறலாம். இவரை வணங்கி ஆன்ம ஞானத்தைப் பெற்றவர் அப்பர்.மத வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன்இந்த வரியை நாம் புரிந்துகொள்வதற்கு மீமாம்சக மதத்தைப்பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மீமாம்சக மதத்தை சார்ந்தவர்களுக்கு உமையம்மை அருள் செய்த திருவடிவே இப்பாடலின் இவ்வரியில் சூட்டப்படுகிறது. அதை சற்று விரிவாகக் காண்போம்.மீமாம்சக மதம் என்பது ஜைமினி முனிவரால் ஏற்படுத்தப்பட்டது. இம்மதத்தின் சித்தாந்தம் உலகம் உண்மை (ஜகத் சத்தியம்) பொய்யன்று, உலகத்திற்கு ஆதியும் அந்தமும் இல்லை. உலகத்தைப் போலவே வேதம் தோற்றமும் முடிவும் அற்றது. வேதத்தை யாரும் சொல்லவும் எழுதவும் இல்லை “ஆத்யந்த ரஹிதம் வேதம் அபௌருஷேயம் வேதம்” – யார் ஒருவராலும் இயற்றப்படாதது வேதம். ஆன்மாக்கள், கர்மவசத்தால் உடலெடுத்து சொர்க்க – நரக பூவுலகங்களில் இன்ப – துன்ப, ஞானம் முதலிய அனுபவங்களைப் பெறும். ஆன்மாவும் தோற்றமும் அழிவும் அற்றது.வேதத்தில் சொல்லப்பட்ட முறைப்படி வேள்வி செய்தால், பாவங்களிலிருந்து விடுபடலாம். ஞானத்தைப் பெறலாம். சொர்க்கத்தை அடைய வேள்வியே மிகச் சிறந்த சாதனம். அதற்கு மேல் எதுவும் இல்லை என்ற கொள்கையை உடையவர்கள். கடவுள் என்று யாரும் இல்லை. வேதத்தின் சொற்பொருளே கடவுள் என்ற கொள்கையை உடையவர்கள். அவர்கள் துறவை ஏற்காதவர்கள். எப்போதும் இல்லறம்தான் பயன் தரும் என்று நம்புகிறவர்கள். இல்லற தர்மத்தையும், வேள்வியையும், வேதத்தையும் மட்டுமே அறமாக கொண்டவர்கள்.இவர்கள் தாருகாவனத்துப் பகுதியில் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். இறைவனை விட வலிமை வாய்ந்தவை யாகமே என்ற எண்ணம் கொண்டிருந்த அவர்களின் ஆணவத்தையும், கர்வத்தையும் அழிக்கும் நோக்கத்தோடு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். யாகம் செய்த முனிவர்கள், மோகினியைக் கண்டதும் யாகத்தை பாதியிலேயே விட்டுவிட்டு அவள் (மோகினி) பின்னே சென்றனர்.அவர்களின் மனைவியரும் தந்நிலை மறந்து பிட்சாடனரை பின்தொடர்ந்து சென்றனர். முனிவர்கள் சிவபெருமானின் செயலை கண்டு வெகுண்டனர். அவருக்கு எதிராக வேள்வி செய்து அதிலிருந்து அக்னி, புலி, மான், புழு, பாம்பு, முதலியவற்றை தோற்றுவித்து அவர் மீதுஏவினர். அந்த முயற்சியில் தொடந்து தோல்வியை மட்டுமே தழுவி, கடைசியாக மதயானையை வேள்வித்தீயில் உண்டாகும்படி செய்து, அதை சிவன்மீது ஏவினர். பிட்சாடனர் வடிவில் வந்த சிவபெருமான், யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். அதைக் கண்டதும் முனிவர்கள், தான் வென்றதாக மகிழ்ந்தனர். உலகம் இருண்டது. இறைவனைக் காணாது உமையம்மை அஞ்சினாள். யானையின் வயிற்றுக்குள் சென்ற சிவபெருமான் அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு நடனமாடியபடி அந்த யானையின் தோலை மேலே போர்த்திக்கொண்டு வருகிறார். உமையம்மை, முருகப்பெருமானை தன் இடுப்பில் வைத்துக் கொண்டு பயந்து ஓட முயலுகையில், முருகன் தன் தந்தை வருவதை சுட்டிக் காட்டுகிறார். அதன் பின்னர் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வணங்கி நின்றனர்.இதையே நாவுக்கரசரும் திருச்சேறை தேவாரத்தில்;விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கைதரித்ததோர் கோல கால பயிரனாகி வேழம்உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு  மணிவாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே– என்கிறார்.இதையே வேதம், யானைத் தோலைப் போர்த்தி வில் அம்பை ஆயுதமாக கொண்டவன் ‘க்ருத்திம் வாசன ஆசார பினாகம்’  என்ற வரிகளால் நன்கு உணரலாம். இத்தகைய வடிவத்தை ஆகமமானது கிருத்திவாசர் என்றும் உமையை இளமுலை நங்கை என்றும் அழைக்கிறது. மந்திர சாத்திரத்தைப் பொறுத்தவரை, ஆபிசாரம் என்பது வேள்வி. எதிரிகளை அழிப்பதற்கு வேள்வியைக் களமாக கொண்டு செய்யப்படும் மந்திரப்போர் முறையாகும். இம்முறையில் எதிரியை அழிப்பதற்கு ஆபிசாரம் என்று பெயர். அப்படி ஆபிசார பிரயோகத்தால் துன்புறுபவர்கள், அதிலிருந்து விடுபட இந்த கிருத்திவாசன் வணங்குவர். இது அபிராமி பட்டர் காலத்தில், செய்வினை என்ற பெயரில் வழக்கில் இருந்தது. அதை விலக்க வழிகாட்டுகிறார் பட்டர்.(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…)தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi