திருவள்ளூர், ஜூலை 2: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் முன் விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அங்கன்வாடி பெண் ஊழியரை, அரிவாளால் வெட்டிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மனைவி சகுந்தலா (65). அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவரது, எதிர்வீட்டில் வசிப்பவர் கபிலன் (23). கபிலனின் தந்தை இறந்ததற்கு, சகுந்தலாதான் காரணம் என இரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சகுந்தலாவை, அங்கு வந்த கபிலன் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில், பலத்த காயமடைந்த சகுந்தலாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த மப்பேடு போலீசார், ஓய்வுபெற்ற அங்கன்வாடி பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடிய கபிலனை தேடி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக முன்னாள் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு வெட்டு
0