அண்ணாநகர், மே 29: சென்னை சின்ன நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ்(22). இந்நிலையில் மனோஜ் தனது நண்பர்களுடன் நேற்று ஆகாஷ் வீட்டிற்கு சென்று ஆகாஷை வெளியே அழைத்து சென்றார். அப்போது, மனோஜுக்கும், ஆகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த மனோஜ் மற்றும் நண்பர்கள் சுற்றிவளைத்து ஆகாஷை அடித்து உதைத்து தரதரவென இழுத்து பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றனர். திருவேற்காடு பகுதியில் உள்ள அறையில் அடைத்து சரமாரியாக தாக்கினர். மேலும், ஆகாஷிடமிருந்த தங்க செயின், பணம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர், ஆகாஷை மீண்டும் பைக்கில் ஏற்றிக் கொண்டு முகப்பேர் பகுதியில் இறக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.