திருக்கோவிலூர், ஜூலை 23: திருக்கோவிலூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணை கத்தியால் கழித்தவரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் அடுத்த காடகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மனைவி ரமிலாமேரி (36), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயப்பிரகாஷ் (40) என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு ரமிலாமேரி நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கே வந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகிய இருவரும் ரமிலாமேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஜெயப்பிரகாஷ் தான் வைத்திருந்த பேனா கத்தியால் ரமிலாமேரியின் தோள்பட்டையில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த ரமிலாமேரி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரமிலாமேரி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயப்பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.