வேலூர், நவ.23: குடியாத்தம் அருகே 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ஒலக்காசி இந்திரா நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேகர்(61). இவர் கடந்த 2022ம் ஆண்டு குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனியாக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதுடன், அதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களில் உடல் நலன் பாதிக்கப்படவே அவரது பெற்றோர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுபற்றி குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரான சேகரை கைது செய்து வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், முன்னாள் ராணுவ வீரர் சேகருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சந்தியா ஆஜரானார்.