கம்பம், மே 26: கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின், ஒன்றிணைந்து தங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று கம்பத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக கடந்த, 1974-75ம் ஆண்டில், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த 50க்கும் மேற்பட்டோர்கள் ஒன்றிணைந்தனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் ஓய்வு ஆசிரியர் நரசிம்மன் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர்கள் ஓய்வு ஆசிரியர் முருகானந்தம், முருக பூபதி, நாகேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முன்னதாக மறைந்த தங்களது ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.