திருச்செங்கோடு, மே 26: திருச்செங்கோடு எஸ்என்டி ரோடு பகுதியில் பழமை வாய்ந்த குமரன் கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் 1990 முதல் 1995 வரை 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ -மாணவிகள் சந்திப்பு, பள்ளியின் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்று அமர்ந்து ஒருவரோடு ஒருவர் பேசி கரும்பலகைகளை தொட்டு பார்த்து நெகிழ்ந்தனர். மேலும், தாங்கள் பயின்ற காலத்தில் பள்ளி பணியிலிருந்து தற்போது மறைந்த ஆசிரியர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், முன்னாள் மாணவரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான முருகேசன், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சரோஜா, தெய்வ குஞ்சரி, செல்வமணி மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் செந்தில்குமார், ராஜா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.