ஈரோடு,பிப்.22: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 78வது சுதந்திரதின விழாவில் பேசியபோது, முன்னாள் படைவீரர் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்படும் எனவும்,இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில்,30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். ராணுவ பணியின்போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.இந்த திட்டத்தின் கீழ் சுய தொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை பணியின்போது மரணமடைந்த படை வீரர்களின் கைம்பெண்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0424-2263227 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, மின்னஞ்சல் முகவரி exwelerd@tn.gov.in < mailto:exwelerd@tn.gov.in > தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.