கரூர், ஆக. 25: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் 62 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 2020ம் ஆண்டுக்கான கொடிநாள் நிதி வசூல் புரிந்தமைக்காக தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் கிருஷ்ணனுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்று, புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் ஜெயபாஷக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்று, தரகம்பட்டி பதிவுத்துறை சார் பதிவாளர் குமார் என்பவருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.
மேலும், முன்னாள் படைவீரருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் போர்ப்பணி ஊக்க மானியத்துக்கான காசோலை, 2 முன்னாள் படைவீரர் மகன்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை காசோலை, 3 முன்னாள் படைவீரர்களின் குழந்ைதகளுக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலை, முன்னாள் படைவீரருக்கு ரூ. 28 ஆயிரம் மதிப்பில் பக்கவாத நிதியுதவிக்கான காசோலை என மொத்தம் ரூ. 1.77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய்
அலுவலர் கண்ணன், முன்னாள் படைவீரர் துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) சங்கீதா, கண்காணிப்பாளர் சங்கர்ராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.