சோழிங்கநல்லூர், மே 31: தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1999ம் ஆண்டு ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜ்மோகன் முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னை கோட்டூர்புரம் 4வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (86). இவர் தமிழக கேடரில் கடந்த 1960ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அவர், கடந்த 1999ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வயது முதிர்வு காரணமாக நோய் பாதிக்கப்பட்ட அவர், வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வீட்டில் வைக்கப்பட்டது. முன்னாள் டிஜிபி என்பதால் கோட்டூர்புரம் போலீசாரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராஜ்மோகன் உடல் நேற்று 4 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.