மயிலம், ஜூன் 17: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து திண்டிவனம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக சி.வி.சண்முகம் மற்றும் அண்மையில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ந.ம.கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 8.5.2006 நடந்தது. அன்று மாலை சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள தனது வீட்டில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர், அங்கு நின்றிருந்த காருக்கு அடியில் புகுந்து உயிர் தப்பினார். கொலை செய்ய விடாமல் தடுக்க முயன்ற அதிமுக தொண்டர் முருகானந்தத்தை அந்த கும்பல் வெட்டி கொன்றது. இதுகுறித்து சி.வி.சண்முகம் போலீசில் அளித்த புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பாமகவை சேர்ந்த 21 பேரை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன் ஆகிய 3 பேரின் பெயரை நீக்கி விட்டு சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது மட்டும் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இவ்வழக்கு கடந்த 2011ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 21.11.2014ல் இவ்வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாருக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம், அவரது சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இதையடுத்து இவ்வழக்கில் கடந்த ஜூன் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது பாரூக் குற்றம் சாட்டப்பட்ட 3வது நபரான குமரன் (எ) குமரவேல் என்பவர் மீது கூடுதலாக சட்டப்பிரிவுகளை குற்ற வரைவில் இணைப்பதாக கூறி 3வது குற்றவாளி குமரவேல் என்பவரிடம் குற்றச்சாட்டு பற்றி எடுத்துரைத்து அதன் மீது அவரது வழக்கறிஞர் வாதங்கள் செய்யலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை 16.06.2025ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று (16ம் தேதி) 3வது குற்றவாளி குமரவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் மேலே சேர்க்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாதங்கள் ஏதுமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வருகின்ற ஜூன் 25ம் தேதி இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என இவ்வழக்கை ஒத்திவைத்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக் உத்தரவிட்டார்.