பரமக்குடி,ஏப்.4: பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்த குளத்து முனியப்ப சுவாமி மற்றும் காளீஸ்வரி அம்மன் கோவிலின் 57ம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி காட்டுப் பரமக்குடியில் அமைந்துள்ள கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, இளநீர் காவடி, வேல் காவடி எடுத்து ஓட்டப்பாலம், ஐந்து முனைப் பகுதி, பொன்னையாபுரம், ராம்நகர் வழியாக கோயிலை வந்து அடைந்தனர்.
பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. அன்னதானத்தை தொழிலதிபர் ஏழுமலையான் கௌசல்யா துவக்கி வைத்தார். பரமக்குடி, காட்டு பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.