முத்துப்பேட்டை, அக். 4: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ரூ. 4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். ஜாம்புவானோடை, மேலக்காடு, தெற்குகாடு, வடக்காடு, சின்னங்கொல்லை, வௌ;ளாதிகாடு, கொல்லக்காடு, தர;கா, வைரவன்சோலை, கல்லடிக்கொல்லை, வீரன்வயல் மேற்கு, கிழக்கு, வடக்கு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஊராட்சி குறிப்பாக கடற்கரை சார்ந்த ஒரு பகுதி என்பதால் மீனவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அதேபோல் விவசாயமும் முக்கிய தொழிலாகும். முக்கியத்துவம் வாய்ந்த ஊராட்சியாக இந்த ஜாம்புவானோடை உள்ளது.
இந்தநிலையில் ஜாம்புவானோடை தெற்குகாடு ராணுவ காலனிக்கும் – கொல்லைகாடு கிராமத்திற்கு இடையே செல்லும் கந்தப்பரிச்சான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் இப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கடந்து சுற்றி வந்து செல்லும் நிலை மாறும். இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை.
இந்தநிலையில் தமிழகத்தில் தற்போதைய திமுக பொறுப்பேற்றதுடன் அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு நபார்டு வங்கி நிதியுதவியுடன் சுமார் 4.95 கோடி நிதியில் கட்ட முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து பாலம் கட்டுமான பணிகள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 70 சதவிகிதம் பணிகள் நிறைவுபெற்று மீதம் பணிகள் முழுவீச்சில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் அப்பகுதியில் மக்களின் நீண்டகால கனவு நினைவாக போகிறது என மகிழ்ச்சியில் இப்பகுதி மட்டுமின்றி இந்த பாலத்தை பயன்படுத்த தயாராக இருக்கும் சுற்று பகுதி கிராமமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.